புதன், 16 நவம்பர், 2011

என் தோழி உமா க்கு தான் முதல் நன்றி


எனக்கு காலேஜ்ல முதல்நாளே, ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏன்னு தெரியல, திடீர்னு உமா இங்லீஷ்ல பேச ஆரம்பிச்சா. ரொம்ப பயந்துட்டேன், இங்கிலீஷ்னா அவ்ளோ பயம்…வெறும் 26எழுத்த வச்சிக்கிட்டு என்ன ஆட்டம்போடுது பாருங்க.

அவ என்ன பேசினாலும் என்னுடைய பதில் ஒரு சின்ன சிரிப்பு அடுத்து எஸ்கேப். ஒருநாள் வகையா மாட்டிக்கிட்டேன்..

Hai velu, what happen to you da>    னு தான் கேட்டா.. அவ பேசுறதே புரியாதுங்கறதால என்ன பேசுறானே கவனிக்காம, ட்க்னு ,இதோ பார் உமா… நீ தமிழ் நல்லாதான பேசுற அப்படியே பேசுனு சொன்னேன்…

அப்ப அவ சாதாரணமா தமிழ்ல பேசினப்ப ரொம்ப இனிமையா இருந்துச்சு, அவ பேசுன தமிழால இல்ல, நான் ஆங்கிலத்துல இருந்து தப்பிச்சதால…

ஏதோ ஒரு சாய்பாபா செண்டர் ல இலவசமா ஆங்கில வகுப்பு நடத்துறாங்க போடானு உமா தான் சேத்துவிட்டா. தாம்பரத்துல தனியா எப்படி போறதுனு யோசிச்சப்ப வினோத் என் கூட வரேனு சொன்னான். வெண்ணை திரண்டு வர்ர நேரத்துல தாழிய ஏன் உடைக்கனும்னு நானும் சந்தோஷமா போனேங்க.

ஏன் தெரியுமா ? என் கூட படிச்ச அத்தனை பேருமே ஆங்கில வழியில் படிச்சவங்கதான் . அங்க போனப்ப வினோத் அவ்ளோ நல்லா ஆங்கிலத்தில் பேசினான்…எனக்கே வியப்பா இருந்துச்சு . அதனால

அவன வேற வகுப்புலயும் என்னை அடிப்படைப் பாடத்துலயும் அந்த சென்டர்ல பிரிச்சிட்டாங்க…
ஒரு வழியா 3மாசம் படிச்சதால் ஓரளவுக்கு பயிற்சி கிடைச்சது..
இப்பவும் நான் ஓரளவுக்கு ஆங்கில அறிவு இருக்குறதா நினைச்சேன்னா , என் தோழி உமா க்கு தான் முதல் நன்றி சொல்வேன்.

வியாழன், 10 நவம்பர், 2011

என் வாழ்க்கையின் இன்னொரு பக்கம்


கல்லூரிக்குள் வந்த முதல் நாள், ஒரு பெரிய ஹால், அதுல எல்லா மாணவர்களையும் உட்கார வைத்தார்கள். அங்க ஒரு பேராசிரியர் வந்தாரு, தன்னை அறிமுகப்படுத்தினாரு, தமிழ் பேராசிரியர்னு, ரொம்ப ஆச்சரியம். ஏன் தெரியுமா ?
எல்லோரயும் போல நானும் சினிமாவ பாத்து ஏமாந்தவங்க…. தமிழ் வாத்தினாலே காலேஜ்ல காமெடியாவும், அதேமாதிரி வேட்டி சட்டை, திருநீரு பட்டைனு இருந்த, இமேஜ் உடைஞ்சி சினிமாக்காரங்க மேல ஏதோ ஒரு சின்ன பெரிய்ய…கோவம்.
அங்க வந்த பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் ஒண்ணா கலந்து இருந்தாங்க. என் பக்கத்துல இருந்தவன் கிட்ட பேர கேட்டேன் அசோக்னு சொன்னான். படப்பைல இருந்து வரேனு அறிமுகப்படுத்திக்கிட்டான் ஆனா இவன் பி.காம் துறை… அங்க ரமேஷ், ராஜேஷ்கண்ணா, துளசி, சரண்யா.. இப்படி பல பேரு அறிமுகப்படுத்திக்கிட்டு இருந்தப்ப எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு அறிமுகமா இருந்தவங்க, ரெண்டுபேர். அவங்க பெயரோட முதல் எழுத்தும் கூட,ஒரே எழுத்துதான்.. ஒரே பள்ளியில் படிச்சவங்க.. நல்ல நண்பர்களா இருந்தாங்க… அதனால அவங்களோட நான் பேசினேன்.. அதில் ஆச்சரியம் என்னான்னா… அவங்க ரெண்டுபேரும் என்னோட துறையைச் சார்ந்தவங்கதான். அப்படி இப்படினு ஏதோ பேசி மதிய சாப்பாட்டுக்கு நான் தான் அவங்க ரெண்டு பேருக்கும் ஸ்பான்சர், கொஞ்சம் கூட கூச்சமில்லாம ரொம்ப வருஷம் பழகுன நட்பா பேசிட்டே சாப்பிட்டாங்க.. எங்க கூட ஒரு தேவதையா ஒரு பொண்ணு சேர்ந்தா…. பேரு உமா….கொஞ்சம் காலேஜ் லெவல நான் அடைஞ்சதா நினைக்கிறப்ப அவ பேசுறதே புரியல… எனக்கு மட்டும் இல்லை என் கூட இருந்த என் நண்பர்களா லன்ஞ்ல இருந்து பதவியேத்துக்கிட்ட விஜய் அண்ட் வினோத் ரெண்டுபேருக்கும் புரியல… அப்படி ஒரு பீட்ட்ட்ட்ட்டர் இங்கிலீசுனா பாருங்களேன். ஆனா அந்த  உமா என் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்த காமிப்பானு அப்ப தெரியல எனக்கு…

புதன், 9 நவம்பர், 2011

ஊருவிட்டு ஊருவந்து படிக்க போறோம்ல…


2003 ஜீலை மாதம் கல்லூரிக்கு செல்ல தயாராகி இருந்தேன். பாடப்புத்தகம் இருக்காது, வீட்டுப்பாடம் கிடையாது, ரெக்கார்ட் தொல்லை இல்லை.. இப்படி ஒரு அபிப்ராயம், அதோட புதுசா ஏதோ சாதிக்கப் போறோம்னு மனசுக்குள்ள ஒரு மாய பிரம்மை…..  புது பேண்ட்டு… புது சர்ட்டு… புது ஷூ… புது டிபன் பாக்ஸ்… புது பை… இப்படி கலக்கிகிட்டே பல்லவ சாம்ராஜ்யத்துல இருந்து அதாங்க காஞ்சிபுரத்துல இருந்து ரயில புடிச்சு , டிக்கெட் எடுத்து 60கிலோமீட்டர் தாண்டி நான் வந்தேன் சிங்காரமா ஊரு சென்னையினு பேரு… அப்படினு. வந்ததும் ஒரு இடி விழுந்துச்சு பாருங்க.. முத அடி… செம இடி. மனசு தளரல… அது என்னான்னா, ஆபிசுதாங்க கோடம்பாக்கம் காலேஜ் தாம்பரம் பக்கத்துலனு அன்னைக்குதான் தெரிஞ்சது… முதல் முறை ஏமாற்றம். கல்லூரியை பார்க்காமலே நான் சுவாசித்த பச்சையப்பன் கல்லூரியை ஏமாற்றி இங்கு வந்தேன்….

ஊருவிட்டு ஊருவந்து படிக்க போறோம்ல… அதுக்காக முதல் நாள்ல விழுந்த அடி இப்படியா இருக்கணும். கலர் கலரா சென்னை பொண்ணுங்க, சூப்பரான சென்னை வாழ்க்கைனு ஏங்குன என் இளமனசு பட்ட பாடு கொஞ்சம்நஞ்சம் இல்லங்க.

திங்கள், 7 நவம்பர், 2011

வி ஜ ய் க ணே ஷ்


காதலித்து கல்லூரிக்குள் வந்த காளை,

நட்பாய் என்னை சூழ்ந்தான்,

என்னடத்தையை அழகாக்கினான்,

எனக்காக எதையும் சரிசமமாக்கினான்,

படிப்பாளி, புத்திசாலி, அழகான கோவக்காரன்…

கலைக்கு ஏத்த கலையரசன் தான் இவன்,

பெண்ணின் அழுகையை, பொய்கையாக நினைக்க

மறந்தான்,

ஒரு கேடுகட்ட குள்ள நரி யால்

என்னை இழந்தான்,,,



கு.ம.ரா…..




குருவி மலை ராசேந்திரன்
இவன்
ஒருதலையாய் காதலித்தான்
ஒருத்தரையா காதலித்தான்!

நட்பாய் இருந்த இருவரையுமே

தவறென்று உணர்த்த தவறினேன்
அதனால் தான்
தவறுக்கு தண்டனையாய்
நட்புக்கு விடை கொடுத்தான்!

வீணாகிறதே காலம் என்றவன்,
எப்படித்தான் அடிமையானானோ
வீணாவதற்காகவே…!

தோழியை காதலியாக எண்ணுபவன் மடையன்
என்றான்

மடத்தனம் செய்துகொண்டிருக்கும்
மடையனாக,
அதைக்கேட்டதால்,
கூடாநட்பென்று,
உதறிவிட்டான்.

வினோத்




வெண்ணையாய்
திரண்டுவரும்
அன்புள்ளம்,
ஆனால்
தொண்ணையாய்
என் நட்பு
பறந்து விட்டதாலோ என்னவோ
உருகிவிட்டான்
ஒரு மங்கையின் பேச்சால்!

ஒவ்வொரு முறையும்
கிண்டலும் கேளியும் தான்
அதை கண்டுகொள்ளாத
நட்புள்ளம் அவன் இதயம் தான்!

வீடெல்லாம் சைவமெனினும்
எங்களுடன் அசைவம் மட்டுமே,
மாலையில்  எங்களுக்காக
சூடான டீயுடன் போண்டா,
எப்பொழுதும் அவனே கணக்கு முடிப்பான்,
ஒருநாள்
என் நட்பையும் சேர்த்து!

ஏன் இந்த வலை(லி)ப்பதிவு

2003 இல் நான் முதன்முதலாக

கல்லூரியில் கால் பதித்தபோது ஏற்பட்ட புதிய நட்புகள்..

மீண்டும் புதுப்பிக்க இயலாத உடைந்த பாலமாக

என்னில் புதைந்த அனுபவத்தை கதையாக...

 வாசிக்கும் நெஞ்சங்களில் விதையாக ...

 சில நேரங்களில் கவிதையாக,

பதிக்கிறேன்.

இதனால் கரையானுக்கு

இரையாகிக் கொண்டிருக்கும்

எனது கல்லூரி டைரி விடைபெறலாம்...